×

சென்னையில் இருந்து திருச்சி வந்த அரசு பஸ்சில் தவற விட்ட 10 பவுன் நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு: டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு

திருச்சி, மே 7: சென்னையில் இருந்து திருச்சி வந்த பஸ்சில் பயணி தவறவிட்ட 10 பவுன் நகைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கண்டோண்மெண்ட் பணிமனையை சேர்ந்த புறநகர் பஸ் கடந்த 4ம் தேதி சென்னை மாதவரத்தில் இருந்து திருச்சிக்கு வந்தது. திருச்சியில் மறுநாள் அதிகாலை பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் டிரைவர் ரமேஷ் மற்றும் கண்டக்டர் கோபாலன் ஆகியோர் பணி முடித்து பஸ்சை கண்டோன்மென்ட் பணிமனையில் விட்டனர். முன்னதாக பஸ்சில் வழக்கமான ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு துணிப்பையில் நகைகள் இருப்பதை கண்டனர். உடன் அந்த நகைகள் அடங்கிய பையை பணிமனை பாதுகாவலரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில் பெரம்பலுாரில் இருக்கும் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்த பெரம்பலுார் சாமியப்பா நகரை சேர்ந்த மதினா பீ என்பவர், ‘தான் சென்னை மாதவரத்தில் இருந்து பெரம்பலுார் பஸ் நிலையத்தில் வந்து இறங்கியதாகவும், தன்னுடன் எடுத்து வந்த நகைகள் அடங்கிய துணிப்பையை பஸ்சில் தவறவிட்டுவிட்டதாகவும்’ கூறியுள்ளார். அதில் தங்க ஆரம்-1, தங்க நெக்லஸ்-1, தங்க தோடு-2, தங்க மோதிரம்-2, தங்க மாட்டல்-2, தங்க பிரேஸ்லெட்-1, வெள்ளி கொலுசு-2, வௌ்ளி மோதிரம்-2, வெள்ளி இடுப்பு மாட்டல்-1 என 81.150 கிராம் தங்க நகைகள் மற்றும் 149.100 கிராம் வெள்ளிப்பொருட்கள் இருந்தது.

இதனையடுத்து பெரம்பலுார் பணிமனையில் இருந்தவர்கள், ‘நீங்கள் வந்த பஸ் திருச்சி பணிமனையை சேர்ந்தது. அங்கு சென்று விசாரியுங்கள்’ எனக்கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து திருச்சி பணிமனைக்கு வந்த மதினாபீ, நடந்தவற்றை பணிமனை கிளை மேலாளர் சரவணபாபுவிடம் கூறியுள்ளார். உடனே அவர், மதினாபீ பஸ்சில் பயணம் செய்ததற்கான பயணச்சீட்டை ஆய்வு செய்தார். டிரைவர் ரமேஷ் மற்றும் கண்டக்டர் கோபாலன் ஆகியோரும் மதினாபீ பஸ்சில் பயணம் செய்ததை உறுதி செய்தனர். தொடர்ந்து மதினாபீ தவறவிட்ட நகைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததில், தவறிய நகைகள் மதினாபீக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை திருச்சி கண்டோன்மென்ட்டிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கோட்ட மேலாளர் சேசுராஜ் முன்னிலையில் மதினா பீ வசம் நகைகளை ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் நேர்மையாக நடந்து கொண்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.

The post சென்னையில் இருந்து திருச்சி வந்த அரசு பஸ்சில் தவற விட்ட 10 பவுன் நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு: டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Trichy ,Tamil Nadu State Transport Corporation ,Tamil Nadu Government Transport Corporation ,Dinakaran ,
× RELATED முகூர்த்தம், வார இறுதி நாட்களை...